நாகர்கோவில்:
பயங்கரவாதிகளால் களியக்காவிளை எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு ஆதரவாக, அவதூறு கருத்து பதிவிட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
எஸ்ஐ வில்சன் கடந்த 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் கலியக்காவிளை சோதனைச் சாவடியில் இரவு பணியில் இருந்தபோது, அந்த வழியாக ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகளை தடுத்ததால், பயங்கரவாதி களால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் தவுஃபீக், அப்துல் சமீம் ஆகியோரை காவல்துறையினர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்ததால், பழிதீர்ப்பதற்காக எஸ்.எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றதாக அவர்கள் இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், அப்துல் சமீம் மீது தீவிரவாதி என எஸ்.எஸ்.ஐ. வில்சன் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், அதனால் சமீம் தீவிரவாதியாக மாறியதாகவும், குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டனத்தைச் சேர்ந்த நவாஸ் ஷாகுல் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.
இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் நவாஸ் ஷாகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு தங்க இடம் கொடுத்ததாக, பெங்களூருவைச் சேர்ந்த ஹுசைன் ஷெரிப் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
மேலும், போலி முகவரிகள் மூலம் சுமார் 200 சிம் கார்டுகள் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.