மாமல்லபுரம்

நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான மக்கள் வந்ததால் மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான குப்பைகள் குவிந்துள்ளன.

தமிழகத்தில் நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், பொழுது போக்கு மையங்களுக்குச் சென்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தனர்.  காலை முதலே மக்கள் மெரினா கடற்கரை, மாமல்லபுரம் பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு குடும்பம் குடும்பமாகக் குவியத் தொடங்கினர்.

பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வந்ததால், சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் 5 ஆயிரம் காவலர், இதர பொழுது போக்கு இடங்களில் 5 ஆயிரம் காவலர் என மொத்தம் 10 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதை போலவே மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்ததால் மாமல்லபுரம் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மாமல்லபுரத்தில் எங்குப் பார்த்தாலும் மனித தலைகளே தென்பட்டது.  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்னை புறநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுப்புற புறநகர் பகுதிகளில் இருந்து கட்டுச்சோற்றைக் கட்டி கொண்டு வந்து இருந்தனர்.  மாமல்லபுரக் கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், கலங்கரை விளக்கம் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். மக்களின் தற்காப்புக்காகப் படகுடன் கூடிய நீச்சல் படை வீரர்கள் கடற்கரையில் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர்.

காவல்துறையினர் கடற்கரையில் பொதுமக்களை ஒலிபெருக்கி மூலம் கடலில் குளிக்க வேண்டாம், விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவ்வப்போது எச்சரித்துக் கொண்டிருந்தனர். மாமல்லபுரத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் உள்ள மாமல்லன் சிலை மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுர நகர் முழுவதும் உதவி காவல்துறை சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில், மாமல்லபுரம் காவல்துறை ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மாமல்லபுரத்தில் நேற்று கூடிய மக்களால் நகரில் ஏராளமான குப்பைகள் சேர்ந்துள்ளன.  இதனால் இவற்றை உடனடியாக அகற்றுமாறு அந்நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.