சென்னை:
குழந்தைகள் ஆபாசப்படங்கள் ஆன்லைனில் பார்ப்பது, டவுன்லோடு செய்வது, மற்றவர்களுக்கு ஷேர் செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், குழந்தைகளின் ஆபாசப் படங்களை டவுன்லோடு செய்து, ஷேர் செய்ததாக விமான நிலையத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையை சேர்ந்தவர் சுமித் குமார் கல்ரா என்ற 49வயது தொழிலதிபர், குழந்தைகள்ஆபாச பட இணைப்பை மற்றவர்களுக்கு அனுப்பி வந்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம்பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் மிக அதிகமானோர் ஆபாசப்படங்கள் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்கள் மற்றும் இணைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதும், பதிவிறக்கம் செய்து அதை பலருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றம் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் ஏடிஜிபி ரவி உச்சநீதி மன்றத்தின் உத்தரவை தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆபாசப் படங்கள் பார்ப்போர் பட்டியல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. ஏற்கனவே குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து மேலும் சிலர் மீது நடவடிக்கை பாய்ந்தது.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆபாசப் படம் பகிர்ந்ததாக, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக் கான தேசிய மையத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் அடிப்படையில், சைபர் கிரைம் குற்றப்பிரிவு ஆய்வு செய்ததில், எழும்பூர். மாண்டியத் சாலையில் உடற்பயிற்சி சாதன மொத்த வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் சுமித்குமார் கல்ரா என்பவர் தனது முகநூல் பக்கம் மூலம் இணையதளத்தில் தடை செய்யப்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியரின் ஆபாசப்படங்களை தீய மற்றும் பாலியல் எண்ணங்களோடு பதிவிறக்கம் செய்து தான் பார்த்து. அதனை வேறு முகநூல் முகவரிக்கு பகிர்ந்துள்ளார்.
இது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவரின் செயல் சமூக நல் ஒழுக்கத்தை சீரழிக்கும் செயல் என்பதால். கணிணி வழி குற்ற புலனாய்வு பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில். வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் ஆணையாளர் விசுவநாதன் உத்தரவின்பேரில், துணைஆசணையாளர் ஜெயலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் சுமித்குமார் கல்ராவை கைது செய்து. அவர் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன் கைப்பற்றப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் அவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு. நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.