திருவனந்தபுரம்: 2018-19ம் ஆண்டில் வெள்ள நிவாரணமாக ஒதுக்கப்பட்ட அரிசிக்கு ரூ.205 கோடி செலுத்துமாறு இந்திய உணவுக் கழகம் கேரள அரசை கேட்டிருக்கிறது.

மழை, புயல், வெள்ளம் என கடந்தாண்டு பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களை தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு ரூ.5,908.56 கோடியை விடுவிக்க மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.

ஆனால் அந்த மாநிலங்களின் பட்டியலில் கேரளா இல்லை. கேரளா கோரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந் நிலையில் இந்திய உணவுக் கழகமானது கேரளாவுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில் 2018-19 வெள்ளத்தின் போது வெள்ள நிவாரணத்தின்போது வழங்கப்பட்ட 89,450 டன் அரிசிக்கான பில் தொகையை செலுத்துமாறு கேட்டுள்ளது. தேசிய பேரழிவு மேலாண்மை ஆணைய அதிகாரிக்கு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் 120 பேர் பலியாகினர். 2,100 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதம் அடைந்தன. வெள்ள சேதத்தை சமாளிக்க மத்திய அரசிடம், இந்த தொகையை தந்து உதவிடுமாறு கேரளா  கோரியிருந்தது.