ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவித்தால் சர்வதேச அளவில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு  தகவல் தெரிவித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.இன்று இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.

அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே ஏழு பேரையும் ஆயுள் தண்டனையிலிருந்து விடுவிக்க மறுத்து குடியரசுத் தலைவர் எடுத்த முடிவை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தாக்கல் செய்த கடிதத்தில், 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசு முடிவு குறித்து 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதியிட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியதாகவும், அதில் மத்திய அரசின் முடிவை மத்திய உள்துறை இணைச் செயலாளரான வி.பி.துபே கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏழு பேரை விடுவிப்பது குறித்து மூன்று மாதத்தில் முடிவெடுக்க வேண்டுமென 2018 ஜனவரி 23-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், அதன் பின்னர் பரிசீலித்து முடிவெடுத்துள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித வெடிகுண்டின் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, காவல்துறையினர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் என்பதாலும், அந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ எதிர்ப்பதாலும், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும், எல்டிடிஇ அமைப்புடன் சேந்து கடுங்குற்றத்தைச் செய்தவர்களை விடுவித்தால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்பதாலும் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், இந்த வழக்கில் மத்திய அரசு எதிர் மனுதாரராக இணைக்கப்படாத நிலையில் ஆவணத்தைத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராகச் சேர்த்து நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.