டெல்லி: கேரளாவை தவிர்த்து 7 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.
2018 மற்றும் 2019ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு 20,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக அம்மாநில அரசு அறிவித்தது.
2019ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவால் 2109 கோடி ரூபாய் என்ற சேத மதிப்பை மத்திய அரசுக்கு கேரளா அனுப்பி வைத்திருந்தது. மத்திய அரசு அதற்கான போதிய நிவாரண நிதியை அனுப்பும் என்று எதிர்பார்த்த வேளையில் கேரளாவை தவிர்த்து 7 மாநிலங்களை தேர்ந்து எடுத்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது. மொத்தம் 7 மாநிலங்களை இக்குழு தேர்ந்து எடுத்துள்ளது.
உத்தரப்பிரதேசம், கர்நாடகா, திரிபுரா, அசாம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகியவையே அந்த மாநிலங்களாகும். இந்த 7 மாநிலங்களில் 4 மாநிலங்கள் பாஜகவில் ஆட்சியில் இருக்கின்றன. மொத்தமாக இந்த 7 மாநிலங்களுக்கும் சேர்த்து 5908.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அசாமுக்கு ரூ .616.63 கோடி, இமாச்சல பிரதேசத்திற்கு ரூ .284.93 கோடி, கர்நாடகாவிற்கு ரூ .1869.85 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ .1749.73 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ .956.93 கோடி, உத்தரபிரதேசத்திற்கு ரூ .367.17 கோடி என இழப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 2018ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டிலும் கேரளா புறக்கணிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை எதிர்பாராதது, துரதிருஷ்டவசமானது என்று கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறி இருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: 2109 கோடி இழப்பீடு கோரி, கேரளா ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்று ஏற்கனவே அனுப்பி இருந்தோம். ஆனால் ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்டோம்.
இதேபோன்ற பாகுபாட்டை 2018ம் ஆண்டும் நாங்கள் எதிர்கொண்டோம். எங்கள் மாநில அமைச்சர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறவும் மத்திய அரசு தடுத்துவிட்டது. உலகம் முழுவதும் இருக்கும் மலையாளிகள் எங்களுக்கு உதவ தயாராகவே இருந்தனர். ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதிக்கவில்லை என்றார்.