பாட்னா: பீகாரில் பாரதீய ஜனதாவோடு கூட்டணி ஆட்சி நடத்திவரும் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி, மத்திய அமைச்சரவையில் விரைவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 40ல் 39 தொகுதிகளைக் கைப்பற்றின. ஆனால், 17 இடங்களை வென்ற நிதிஷ் கட்சிக்கு, அமைச்சரவையில் ஒரு இடம் மட்டுமே தருவதாக பாஜக தரப்பில் கூறப்பட்டதால், அமைச்சரவையில் சேராமல் தவிர்த்தது நிதிஷ் கட்சி.
பீகாரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் இடையே சில சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும், நாடாளுமன்றத்தில் மோடி அரசால் தாக்கல் செய்யப்படும் சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு நிதிஷ் கட்சியின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.
மேலும், முன்பு மோடியுடன் நிதிஷ் கடைபிடித்துவந்த மோதல் போக்கும் தற்போது இல்லை. எனவே, அடுத்தமுறை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகையில், நிதிஷ் கட்சிக்கு 3 இணையமைச்சர்கள் பதவி வழங்கப்படும் என்றும், அதில் ஒன்று தனிப்பொறுப்புடன் கூடியது என்றும் கூறப்படுகிறது.
இதற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், யாருக்கு பதவி? என்று அக்கட்சிக்குள் பேச்சுகள் நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.