கொல்கத்தா:
பிரதமர் மோடி, பாகிஸ்தான் தூதரா அல்லது இந்தியாவின் பிரதமரா? என்று சந்தேகம் எழுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள என்ஆர்சி, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவைகளில் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்றும், போராட்டம் நடத்தும் காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகள் கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்பாதது ஏன் என கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியின் கேள்விகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அப்போது, நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பாகிஸ்தானை தொடர்புபடுத்தி பேசும் பிரதமர் மோடி உண்மையில் இந்தியாவின் பிரதமரா? என்று சந்தேகம் எழுவதாகவும், அவர் பாகிஸ்தான் தூதர் போல பேசியுள்ளார் என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மம்தாவின் பதிலடி, சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.