டில்லி
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் பி எஃப் ஐ உள்ளிட்ட அமைப்புக்களைக் கண்காணித்து வருகிறது.

குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதில் இருந்து நாடெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள் கடுமையாக உள்ளன. உத்தரப் பிரதேச மாநில காவல்துறை இந்த கடுமையான போராட்டங்களுக்கு பி எஃப் ஐ என அழைக்கப்படும் பாபுலர் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா, சமூக ஜனநாயகக் கட்சி, உள்ளிட்டவைகளை தடை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது.
பாபுலர் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்டதாகும். இந்த அமைப்புக்குக் கேரள மாநிலத்தில் நடந்த பல அரசியல் கொலைகளுக்கு தொடர்பு இருந்ததால் இந்த அமைப்பு இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு என அழைக்கப்பட்டது. ஆனால் இந்த அமைப்பின் இணைய தளத்தில் இது தன்னை ஒரு சமூக நல முன்னேற்றத்துக்கான அமைப்பு என விளக்கம் அளித்திருந்தது.
கேரளாவில் தொடங்கப்பட்ட பி எஃப் ஐ நாடெங்கும் காலடிகளைப் பதித்துள்ளது. இதற்காக தன்னுடன் ஒத்த கருத்துக்களைக் கொண்ட அமைப்புடன் கை கோர்த்தது. நீண்ட நாட்களாக இந்த அமைப்பு தேசிய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் இருந்து வந்தது. கடந்த 2013 ஆம் வருடம் கேரள மாநிலம் கண்ணூரில் ஆயுதப் பயிற்சி முகாம்களை இந்த அமைப்புக்கள் நடத்தி வந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த அமைப்பு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.
இதையொட்டி இந்த அமைப்பின் 22 பேர் மீது இளைஞர்களைத் தீவிரவாத பயிற்சியில் ஈடுபடுத்தியதாக வழக்குப் பதியப்பட்டது. இதில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் மீது நீதிமன்றம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. இந்த அமைப்புக்கு நிதி உதவி அளித்தவர்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது. இந்த அமைப்பினரிடம் கந்த 2010 முதல் 2013 வரை நடந்த பல சோதனைகளில் நாட்டு வெடிகுண்டுகள், தாலிபான் மற்றும் அல் கொய்தா குறித்த விளம்பர சிடிக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை கிடைத்தன.
இவர்களுடைய நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பிய ஒரு கல்லூரி பேராசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது. இந்த அமைப்பினருக்கும் சிமி என்பட்டும் இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. சிமி அமைப்பு கடந்த 2001 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அத்துடன் பி எஃப ஐ அமைப்புக்கும் 90 லவ் ஜிகாத் எனப்படும் கட்டாய மதமாற்ற திருமணங்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2018 ஆம் வருடம் இந்த அமைப்பை பாஜக ஆண்ட ஜார்க்கண்ட் மாநிலம் தடை செய்தது. தற்போது நாடெங்கும் பல மாநிலங்களில் இந்த இஸ்லாமிய அமைப்பு தனது துணை அமைப்புக்களுடன் இணைந்து குடியுரிமை சட்டம், மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலப் போராட்டங்களின் பின்னணியில் இந்த அமைப்பு உள்ளதாக மத்திய அரசுக்குச் சந்தேகம் உள்ளது. எனவே இந்த அமைப்பில் உள்ளவர்களையும் அவர்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலையொட்டி மத்திய பாஜக அரசுக்கு பி எஃப் ஐ இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த இயக்கம் தனது வலை தளத்தில், “ஜனநாயகப் போராட்டத்தில் மத்திய அரசு வன்முறையைப் புகுத்தி அடக்க நினைக்கிறது. பல மாநிலங்களில் மக்களின் ஜனநாயக உரிமையை மத்திய அரசு அழித்துள்ளது. குறிப்பாக யோகி ஆதித்ய நாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த அமைதிப் போராட்டத்தில் காவல்துறையினர் நுழைந்து வன்முறைகளை நடத்தி உள்ளனர்” என தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]