பெங்களூரு
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்காமல் உள்ளதால் கர்நாடக மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருமானத்தில் மத்திய அரசு பங்கு அளிப்பது வழக்கமாகும். அத்துடன் மாநிலங்களுக்கு வரி வசூலின் அடிப்படையில் இழப்பீடு தொகை தர ஏற்கனவே ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வருமானம் குறைந்துள்ளதை காரணம் காட்டி மத்திய அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் உள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பல மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி பங்குத் தொகையை வழங்காமல் இருந்தது. மாநிலங்களின் பல நினைவூட்டல் கடிதங்களுக்குப் பிறகு அது மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான ஜிஎஸ்டி பங்குத் தொகையை மத்திய அரசு மீண்டும் நிலுவையில் வைத்துள்ளது.
இவ்வாறு வழங்க வேண்டிய தொகை நிலுவையில் வைக்கப்பட்டதால் கர்நாடக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி பங்குத் தொகை சென்ற மாதம் 31ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். அந்தத் தொகை மற்றும் டிசம்பர் மாத பங்குத் தொகை ஆகியவை இந்த மாதம் இறுதியில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத பங்குத் தொகை மார்ச் இறுதியில் வழங்கப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு தாமதமாக அளிப்பதற்கு மத்திய அரசு எவ்வித காரணமும் கூறாமல் உள்ளது. அத்துடன் மேலே குறிப்பிட்ட தேதிகளில் தொகை கிடைக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளதால் கர்நாடக அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.
[youtube-feed feed=1]