சென்னை:
ஊரகப் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பல இடங்கசளில் தேர்தல் முடிவு அறிவிக்க தேர்தல் அலுவலர்கள் தாமதம் செய்து வருவதாகவும், இது திட்டமிட்ட சதி என்று, மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்தார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், சேலம் உள்படபல பகுதிகளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் தேர்தல் அலுவலர்கள் தாமதம் செய்வதாகவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் வந்த திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு தேர்தல் ஆணையர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து, தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பதாகவும், உள்ளாட்சி தேர்தல் வாக்குஎண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும் புகார் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ”திமுக கூட்டணி 80% இடங்களில் முன்னிலைப் பெற்று வரும் நிலையில், அதை தடுக்க வேண்டுமென அதிமுகவினரும், அதிகாரிகளும் திட்டமிட்டு சதிசெய்து கொண்டிருக்கிறார்கள்; பல இடங்களில் திமுகவினர் வெற்றிபெற்று விட்டபோதும் அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.