இன்று தைப்பூச விழா நடைபெறுகிறது. இதையொட்டி முருகக் கடவுள் பள்ளிகொண்டுள்ள அறுபடை வீடுகளிலும் இதர பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களிலும் பக்தர்கள் குவிந்துவருகிறார்கள்.
பழனியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் நடை பயணமாக வந்துகொண்டிருக்கிறார்கள்.
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கைதப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். . அதன்படி பழனியில் இன்று தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.
கடந்த 18-ந்தேதி தைப்பூச விழாகொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆனது.. இந்த திருவிழாவின் 6-வது நாளான நேற்று முத்துக்குமாரர்- வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்ததது. அப்போது அங்கு கூடி இருந்த திரளான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!! என்று பக்தி முழக்கங்களை எழுப்பினர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பிறகு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், வேத மந்திரங்கள் ஒலிக்க திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க தீபாராதனை நடந்தது.
தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 11 மணிக்கு மேஷ லக்னத்தில் திருத்தேரேற்றமும் நடைபெற உள்ளது. பின்னர் மாலை 4.25 மணிக்கு தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறும். . இரவு 7.30 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர்பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். . இன்று சுமார் 10 லட்சம் பக்தர்கள் பழனியில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் பழனி நகர் முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மட்டுமின்றி தேனி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களோடு, திருடர்களும் வலம் வருவார்கள் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க குற்றப்பிரிவு போலீசாரை கொண்ட 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாதாரண உடை அணிந்து, பக்தர்களை போலவே போலீசாரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். வெடிகுண்டு நிபுணர்களை கொண்ட 10 குழுவினர், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய இடங்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கண்காணிப்பு பணியில் ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. சுமார் 2 அடி நீளம், அகலம் கொண்ட இந்த விமானத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.