மங்களூரு
காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த இருவர் குடும்பத்துக்கு கர்நாடக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய பாஜக அரசு இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. இரு அவைகளிலும் நிறைவேறிய அந்த திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் எழுந்துள்ளது.
இந்த போராட்டங்களில் பல இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளது. இந்த கலவரத்தில் உ. பி. மாநிலத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
காவல்துறையினரின் இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்துள்ளனர். அதையொட்டி அரசு மீது கடும் அதிருப்தி நிலவியது. இந்நிலையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் மரணம் அடைந்த இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உள்ளதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.