சண்டிகர்: இந்திய அடையாளத்திற்கு எதிரானச் சட்டம் என்று குற்றம்சாட்டப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சண்டிகரில் நடந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பெரியாரின் படத்தையும் ஏந்திச் சென்றதானது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளதுடன், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, பல்கலை, கல்லூரி மாணாக்கர்கள் உட்பட, பல்வேறு தரப்பினரும், நாட்டின் பல பகுதிகளில் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், யூனியன் பிரதேசமான சண்டிகரில் இச்சட்டத்தை எதிர்த்து பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள், ஜோதிராவ் கோவிந்த புலே மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் படங்களுடன், பெரியாரின் படத்தையும் ஏந்திச் சென்றதுதான் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டம் என்பது நாடெங்கிலும் பிரபலமாகியுள்ள நிலையிலும், பெரியாரின் கொள்கைகள் மற்றும் போராட்ட இலக்குகள் என்பவை, எப்போதும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானவை.
எனவே, பாரதீய ஜனதா அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் பெரியாரின் படம் இடம்பெறுவது இயல்பே. அதுவும், இன்றைய டிஜிட்டல் யுகம். எனவே, பெரியார் வடஇந்தியர்களிடமும் சென்றடைந்ததில் வியப்பில்லை என்கின்றனர் பல சமூக ஆர்வலர்கள்.
அதேசமயம், பெரியார் படம் இடம் பெற்றிருப்பதைப் போன்று போட்டோஷாப் செய்துள்ளனர் என்பதாக பாஜக ஆதரவு வலதுசாரிகள் பலர் குற்றம்சாட்டுவது சமூகவலைதளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது.
ஏனெனில், தங்களின் போட்டோஷாப் வேலைகளால் அவர்கள் மிகவும் புகழ்பெற்றிருந்தாலும், பிறரையும் அதுபோன்றே நினைத்து குற்றம் சாட்டுகின்றனர் என்ற எதிர்க்கணைகள் கிளம்புகின்றன.