டில்லி
தற்போது பொருளாதார வளர்ச்சி மிகவும் சரிந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகையில் பிரதமர் மோடி நேர்மாறான தகவலை அளித்துள்ளார்.
தற்போது இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக உலகப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு அதை ஒப்புக் கொள்ளாமல் உள்ளது. உலகன் புகழ் பெற்ற அமைப்பான அசோசெம் அமைப்பின் 100 ஆவது ஆண்டு விழா இன்று நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
மோடி தனது உரையில்,”இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைவதை நோக்கிச் சென்றும் கொண்டிருக்கிறது. அந்த இலக்கை அடைவது கானல் நீரல்ல. நிச்சயம் நடக்கும். இந்த வளர்ச்சிக்கு இந்தியர்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நவீனமயம் ஆக்கவும் தேவையான தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நாம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆறு வருடங்களுக்கு முன்பு நமது பொருளாதாரம் பேரழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. அதை தற்போது மீட்டு நிலை பெறச் செய்துள்ளோம்.
நாங்கள் தொழில்துறையினரின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றா கவனம் செலுத்தி வருகிறோம். அது மட்டுமின்றி தற்போது விவசாயிகள், தொழிலாளர்கள், கார்ப்பரேட்டுகள் என அனைத்து தரப்பினரின் குறைகளையும் கேட்கும் அரசு இந்தியாவில் உள்ளது. நாங்கள் மாற்றங்களைக் கொண்டு வந்தும் கடும் எதிர்ப்புக்களைச் சந்தித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.