டில்லி

காவல்துறையினரைக் கண்டு அஞ்சாத இரு ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவிகள் வீடியோ வைரலாகி வருகிறது.

நாடெங்கும் நடைபெறும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறி உள்ளது. டில்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று 100க்கும் அதிகமான ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் மாணவர்களை அத்துமீறித் தாக்கிய போது, அங்கு சில மாணவிகள் காவல்துறையை எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள்.   அந்த மாணவிகள் தங்களுடைய நண்பனைக் காப்பதற்காகப் காவல்துறையினரிடம் போரிட்டு அவர்களிடம் அடி வாங்கி உள்ளனர். அவர்களில் ஒரு மாணவி கொஞ்சம் கூட கலங்காமல் காவல்துறையை நோக்கி விரல்களை உயர்த்தினார்.

இதற்காக காவல்துறையினர் அந்த பெண்ணில் காலில் தாக்கினார்கள். அவர் இப்படி எல்லாம் அடிக்கக் கூடாது.. அவ்வளவுதான், என்று காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். காவலர்களை நோக்கி அந்தப் பெண் விரல்களை உயர்த்தும் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி உள்ளது.

இவர்களின் அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது. காவலரை  நோக்கி விரல்களை நீட்டிய மாணவி பெயர் ஆயிஷா ரென்னா, இவருடன் இருந்த இன்னொரு மாணவியின் பெயர் லதீடா பர்ஸானா, மற்றொருவர் ஷகீன் அப்துல்லா. இந்த மூன்று மாணவிகளும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த மாணவிகளில் ஆயிஷா ரென்னா என்னும் வரலாறு மாணவி, லதீடா பர்ஸானா என்னும் பிஏ அரபிக் மாணவி  ஆகிய இருவரும் காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கி இருக்கிறார்கள். அவர்கள், ”மாலை 5.30 மணிக்கு காவல்துறை எங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது . அந்த நேரத்தில் நாங்கள் 9 மாணவிகளும் ஒரு மாணவரும் கல்லூரி வளாகத்திற்குள் இருந்தோம் .

காவல்துறையினர் எங்களைச் சுற்றி வளைத்து வெளியே வரும்படி கத்தினார்கள்.   ஒரு  சில காவல்துறை எங்களை மோசமான வார்த்தைகளில் திட்டி லத்தியால் எங்களைத் தாக்கி, எங்களுடன் இருந்த மாணவரை அழைத்துச் செல்ல முயன்றனர். நாங்கள் அதை அனுமதிக்கவில்லை  ஆகையால் எங்களையும் மீறி காவலர்கள் அந்த மாணவரை வெளியே அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினார்கள்.

அவர்களைத் தடுக்க வேண்டும் என்று வேகமாக ஓடிச் சென்று நாங்கள் மறைத்து நின்று கொண்டோம். காவல்துறை எங்களைத் தாக்காது, பெண்களை அடிக்காது என்று நினைத்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களையும் தாக்கிய போதுதான் எங்களுக்கு அவர்களின் குரூரம் தெரிந்தது. எங்களைத் தாக்கியவர்களில் சிலர் காவலரே கிடையாது என்பது எங்களுக்கும் தெரியும். இந்த அரசு மீது பயம் எங்களுக்கு இல்லை. நாங்கள் இவர்களைப் பார்த்து அஞ்ச மாட்டோம். அல்லா மீது மட்டும்தான் எங்களுக்குப் பயம் உண்டு.

இதேபோல காஷ்மீரில் ஒடுக்குமுறை நிகழ்ந்து வருகிறது. அதற்கு நாங்கள் அமைதியாக இருந்தோம்.  தொடர்ந்து  அயோத்தி வழக்கிலும் இப்படித்தான் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.  எனவே நாங்கள் அரசு மீதும் , நீதிமன்றம் மீதும் நம்பிக்கையை இழந்துவிட்டோம். இப்போது  அவர்கள் எங்களைக் குறி வைத்துள்ளனர், அடுத்ததாக மொத்த இந்தியாவையும் அவர்கள் குறி வைப்பார்கள்” என்று அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.