டெல்லி;
பாரதியஜனதா கட்சியின் நட்பு கட்சியான அகாலிதளம் கட்சி, பாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி உள்ளது.
மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு ஷிரோமணி அகாலிதளம் நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது, நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இஸ்லாமியர்களையும் சட்டத்தில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசியஅகாலிதள செய்தித் தொடர்பாளர் தல்ஜித் சிங் சீமா, இந்த மசோதா நிறைவேற்றப்படுவதை வரவேற்பதாகவும், இந்த மசோதா துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமையின் சலுகைகளைப் பெற உதவும், ஆனால் அது முஸ்லிம் சமூகத்திற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று வலியிறுத்தினார்.
இந்த விவகாரத்தில் “எங்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது – நமது நாடு மற்றும் அதன் அரசியலமைப்பு மதச்சார்பற்றது என்பதால் முஸ்லிம்களுக்கும் நன்மை வழங்கப்பட வேண்டும்” என்றும், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும், முஸ்லிம்களை விலக்குவது “நியாயமில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தல் மற்றும் அட்டூழியங்க ளுக்கு ஆளான இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவர்களுக்கு குடியுரிமை இல்லாததால் எந்த வசதிகளையும் பெற முடியவில்லை. “இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் மத்திய அரசு இந்த மக்களுக்கு ஒரு புதிய குத்தகையை வழங்கியுள்ளது, ஆனால் இரண்டாவது அம்சம் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்பதுதான்” என்றும் சீமா கூறினார்.
ஆனால், கிளர்ச்சியாளர்களால் பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட வன்முறை மற்றும் சேதங்களை அகாலிதளம் கண்டிப்பதாக தெரிவித்தவர், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக இருந்து மோசமாகிவிட்டது.முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு அகாலிதளம் தலைவர் சுக்பீர்சிங் பாதல் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
இந்த மசோதா காரணமாக மத துன்புறுத்தலுக்கு ஆளான நூற்றுக்கணக்கான மக்களுக்கு பயன ளிக்கும் என்றும், “குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படுவது பொதுவான இந்தியர்களின் நலனுக்காகவே உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக நான் போராடி வருகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் குடியுரிமை பெற வேண்டும், இதனால் அவர்கள் வேலை பெற முடியும் அல்லது ஒரு தொழிலைத் தொடங்க முடியும் என்றும், அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் நல்ல கல்வி பெறும் வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.