டெல்லி:

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் காரணமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ரவுடிகள் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.

சிசிடிவியின் காட்சிகளுடன் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மூலம் அவர்களை கைது செய்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், எதிர்ப்பாளர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியுமா? எனது உடையைக் கொண்டு என்னை அடையாளம் காண முடியுமா?  என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா சந்தேகம் எழுப்பி உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் தாக்கியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்களின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், தனது சக நண்பரை  காவலர்கள் தாக்கும்போது கேரளாவைச் சேர்ந்த  நான்கு மாணவிகள் போலீசாருக்கு எதிராக  கோபத்துடன் விரலை உயர்த்தி கேள்வி எழுப்பி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வின்போது, அந்த பெண்கள் மீது, சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் லத்தியால் தாக்க முயலும் காட்சியும் இடம்பெற்று உள்ளது. அதுபோல, பேருந்துமீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் மர்மநபர் குறித்த வீடியோவும் வெளியாகி உள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், இவர்கள்  காவல் துறையைச் சேர்ந்தவர்களா என்று  டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பி உள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட அவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பதால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவரை யாராவது அடையாளம் கண்டுள்ளீர்களா என்றும், அவர்கள் ஆஎஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகின்றன.

இதற்கிடையில், “மாணவர்கள்  போராட்டம் தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த சம்பவத்தின்போது 30 போலீசார் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது உண்மை யில்லை” என்றும், “மாணவர்களின் போராட்டத்தின்போது, ரவுடிகளை நாங்கள் பிடிக்க முற்பட்ட போது, அவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்றதால்தான் காவல் துறையினரும் உள்ளே நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காண முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்த நிலையில் இன்று 10 ரவுடிகளை கைது செய்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  எதிர்ப்பாளர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும் என்று காவல்துறையினர் கூறுவதை நான் கேள்விப் பட்டேன். நான் அதிர்ச்சியடைகிறேன். நான் உங்களிடம் கேட்கிறேன், என் ஆடைகளிலிருந்து என் அடையாளத்தை சொல்ல முடியுமா?  என்று கேள்வி எழுப்பி உள்ளார்.