டெல்லி: மத்திய அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுத்திருக்கிறது.

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2வது முறையாக ஆட்சி அமைத்தது.

அதன் பின்னர் அமைச்சரவை, பதவி ஏற்பு என்று விழா கொண்டாட்டங்கள் அரங்கேறின. கிட்டத்தட்ட அரசு ஆட்சிக்கட்டிலில் ஏறி 6 மாதங்களை தொட்டு விட்டது.

இந்நிலையில் அமைச்சரவையை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அமைச்சர்களின் செயல்பாடுகளை பற்றி ஆய்வு கூட்டம் ஒன்றை வரும் 21ம் தேதித நடக்கிறது.

அந்த கூட்டத்தில் அமைச்சர்களின் கடந்த 6 மாத செயல்பாடுகள் எப்படி இருந்தன, அவர்களின் நடவடிக்கைகள் எப்படி என்பது குறித்து விரிவாக ஆய்வு நடத்துகிறார் பிரதமர் மோடி.

அதன் முடிவில் பல முக்கிய இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா, பொதுச்செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஏற்கனவே ஆலோசனை செய்துவிட்டதாக தெரிகிறது.