டெல்லி:

ன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய  தீஸ்ஹசாரி நீதிமன்றம், இன்று தண்டனை குறித்து தெரிவிப்பதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாதங்களைத்தொடர்ந்து,   குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அந்த பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ  குல்தீப் செங்கார் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில்,   பாதிக்கப்பட்ட பெண் உத்தரப் பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து நடவடிக்கை எடுத்த காவல்துறை அந்தப் பெண்ணின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது.  சிறையிலிருந்து விடுதலையான அவர் சில நாட்களில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில், நீதிமன்றம் உன்னாவ் வழக்கை சிபிஐ விசாரிக்க கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செங்கார் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது வழக்கறிஞர் மற்றும் உறவினர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றபோது காரின்மீது லாரி மோதியது. இதில் அவரது இரு பெண் உறவினர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது வழக்கறிஞரும் படு காயங்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குல்தீப் சிங் செங்காரால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  “உன்னாவ் சிறுமி வன்கொடுமை, விபத்து மற்றும் தொடர்புடைய பிற வழக்குகள் என மொத்தம் ஐந்து வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்திலிருந்து டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து குல்தீப் சிங் செங்கார் மீது கிரிமினல் குற்றப்பிரிவு 120பி, 363, 366, 376 மற்றும் ’போக்சோ’ சட்டத்தின் இதர பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தினசரி  விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிபிஐ தரப்பில் 13 சாட்சிகளும், குல்தீப் சிங் செங்கார் தரப்பில் 9 சாட்சிகளும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா, குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி என அறிவித்து  நேற்று (16ந்தேதி)  தீர்ப்பளித்தார். மேலும் குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் நாளை (இன்று) அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செங்கார் தரப்பு வழக்கறிஞர், குற்றவாளி மக்கள் மன்ற உறுப்பினராக இருந்ததால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து,செங்கார் மீதான தண்டனை விவரம் 20ந்தேதி வழங்கப்படும் என்று நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

இதற்கிடையில், செங்கார் வழக்கு குறித்து,  பத்திரிகையாளர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இதுகுறித்து,  குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் ரியாக்சன் என்ன என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்குப் பதில் அளித்துள்ள ஸ்மிருதி இரானி, “வன்கொடுமை குற்றங்கள் தவறு என யார் சொன்னாலும் அவர்களது கருத்துக்கு ஆதரவாக இருக்கிறேன். சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ள நீதித் துறையின் செயல்பாடுகளுக்குக் கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்து உள்ளார்.