டெல்லி: தலைநகர் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, தாக்குதல் குறித்து ஜனாதிபதியை நாளை சந்தித்து காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முறையிட உள்ளனர்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் உச்ச்கட்டத்தை எட்டியுள்ளன. அசாம், திரிபுரா, மேற்குவங்கம், கேரளா என போராட்டத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது.
டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது. படுகாயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி டெல்லி இந்தியா கேட் முன்பு போராட்டத்தில் குதித்தார்.
அரசுக்கு எதிரான முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் முன்னணி காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர். மொத்தம் 2 மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந் நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஏகே அந்தோணி, சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியினர் நாளை ஜனாதிபதியை சந்திக்க உள்ளோம்.
அனைத்து கூட்டணி கட்சியினரும் வர உள்ளனர். தாக்குதல் குறித்து ஜனாதிபதியிடம் முறையிட இருக்கிறோம் என்று கூறினார்.