உன்னாவ்: உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ செங்கார் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய உன்னாவ் வழக்கு விசாரணையானது, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலால் லக்னோவில் இருந்து டெல்லி தீஸ் ஹாசாரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆக.5ம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது சிபிஐ 5 வழக்குகள் தொடர்ந்தது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை கடந்த 9ம் தேதி விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி நீதிபதி தர்மேஷ் சர்மா, பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்டவரின் தரப்பில் உண்மை இருக்கிறது, ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு சிபிஐ தரப்பு ஏன் நீண்ட காலம் எடுத்தது என்று தெரியவில்லை என்றார்.
வழக்கில் குல்தீப் செங்காருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் வரும் 19ம் தேதி அறிவிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில் 2017ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில் குல்தீப் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும், உறவினர்களும் சிறையில் உள்ள மற்ற உறவினர்களை பார்க்க சென்ற போது அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
விபத்தில் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் பலியாகினர். இளம் பெண்ணும், அவரது தாயாரும் உயிர்பிழைத்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.