டில்லி

நேற்று ஜாமியா மாலியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் அத்து மீறி நுழைந்ததால் வன்முறை ஏற்பட்டதையொட்டி துணை வேந்தர் நஜ்மா அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருத்தப் பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும்  போராட்டங்கள் வலுத்து வருகிறது.  அவ்வகையில் டில்லியில் உள்ள ஜாமியா மாலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் போராட்டம் நடந்தது.  இந்த  போராட்டத்தை அடக்க காவல்துறையினர் நுழைந்தனர்.  இந்த சம்பவத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தியதாகவும் அதில் இருவர் மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.   இதையொட்டி வன்முறை அதிகரித்ததால்  பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர், “காவல்துறையினர் உத்தரவின்றி வளாகத்தினுள் நுழைந்தது உண்மைதான்.  ஆனால் இந்த நிகழ்வில் எந்த ஒரு இறப்பும் நிகழ்வில்லை.   இது முழுக்க முழுக்க வதந்தி ஆகும்.  ஆனால் காவல்துறையினர் அத்து மீறி நுழைந்ததால் ஏற்பட்ட வன்முறையில்  பல சொத்துக்கள்  பாழாக்கப்பட்டுள்ளன.

இவற்றை எவ்வாறு ஈடு செய முடியும்?  அது மட்டுமின்றி பலருடைய உணர்வுகள் காயமடைந்துள்ளன.  அதை எவ்வாறு சரி செய்ய முடியும்?  நேற்றைய நிகழ்வு துரதிருஷ்ட வசமானது.  தயவு செய்து யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.  நாங்கள் எங்கள் வளாகத்தில் அத்து மீறி நுழைந்த காவலர்கள் மீது  புகார் அளித்து வழக்குப் பதிந்துள்ளோம்.

இது குறித்து உயர்மட்ட விசாரணையும் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்.  ஆயினும் எங்கள் மாணவர்கள் அடைந்த மனத் துயரத்துக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்?” என காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பதிவாளர் சித்திக்கி, “காவல்துறை எங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்து மீறி நுழைந்தது தவறானது.  அத்துடன் வளாகத்தில் உள்ள மசூதியின் உள்ளேயும் அவர்கள் நுழைந்துள்ளதாகவும் மாணவிகளிடம்  பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பல வதந்திகள் உள்ளன.     ஆனால் இவற்றை நாங்கள் முழுமையாக ஒப்புக கொள்ளவோ மறுக்கவோ முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.