மும்பை
மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தக்கரே அந்த சட்டத்தை தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் அதை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆயினும் சிவசேனா கட்சி மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவு அளித்தது. இதற்குக் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையொட்டி மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்பின் போது சிவசேனா வெளிநடப்பு செய்தது.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவையொட்டி நேற்று மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது அவர், “வீர சாவர்க்கர் சிந்து நதியில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் பாஜக ஆளும் மத்திய அரசு சிறுபான்மையினரை துயருறுத்தும் இந்த சட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய சட்டம் ஏதாவது கொள்கையின் அடிபடையில் உருவாக்கப்பட்டுள்ளது? இதனால் உண்டாகும் வன்முறைக்கு யார் பொறுப்பு? இந்த சட்டம் சாவர்க்கரின்கருத்துக்களுக்கு எதிரானது. சிவசேனாவை மடக்குவதற்காக இந்த சட்டம் சாவர்க்கரின் கொள்கைப்படி உருவாக்கப்பட்டதாக பாஜக கூறுவது சரியா? சாவர்க்கர் என்றும் மக்கள் விரோதக் கொள்கையை அறிவித்தது கிடையாது. பாஜக இவ்வாறு தெரிவிப்பது சாவர்க்கருக்கு அவமானம் ஊட்டும் செயல்” என தெரிவித்துள்ளார்.