சித்திரதுர்கா, கர்நாடகா
கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயியை வெங்காய விலை உயர்வு கோடீசுவரர் ஆக்கி உள்ளது.
நாடெங்கும் உயர்ந்து வரும் வெங்காய விலையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத அளவுக்கு வெங்காய விலை உயர்ந்துள்ளது. இணையத்தில் பரவி வரும் நகைச்சுவைகளில் வெங்காய விலை முக்கிய இடம் வகிக்கிறது. முக்கியமாக வெங்காயத்தை வெட்டும் போது வரும் கண்ணீர் தற்போது விலையைக் கேட்டாலே வருகிறது என்னும் பதிவு வைரலாகி வருகிறது.
ஆனால் வாடிக்கையாளரைத் துன்புறுத்தும் இந்த வெங்காய விலை உயர்வு ஒரு விவசாயிக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தில் உள ஒரு சிற்றூர் தொட்ட சித்தவனஹள்ளி ஆகும். இங்கு 42 வயதாகும் மல்லிகார்ஜுனா என்னும் விவசாயி வசித்து வருகிறார். இவர் 10 ஏக்கர் நில உரிமையாளர் ஆவார். மேலும் 10 ஏக்கரைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இவர் ரூ.15 லட்சம் கடன் வாங்கி வெங்காயப் பயிர் செய்தார். அவரிடம் சுமார் 50 பேர் பணி புரிந்து வருகின்றனர். அவர் பயிர் செய்த போது வெங்காய விலையில் கடும் சரிவு இருந்ததால் தனது கடனை தீர்க்க முடியோதோ என அஞ்சினார். ஆயினும் பிறகு வெங்காய விலை சிறிது உயர்ந்ததால் தனக்கு ரூ.5-10 லட்சம் வரை லாபம் வரும் எனச் சற்றே மனம் தேறினார்.
ஆனால் இப்போது வெங்காய விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதால் இவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இவருக்கு நவம்பர் முதல் வாரம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.7000 மட்டுமே கிடைத்தது. தற்போது வெங்காய விலை கிலோ ரூ.200 என ஆகி உள்ளது. மல்லிகார்ஜுனா தற்போது 240 டன் அதாவது 20 லாரிச்சுமை வெங்காயத்தை அறுவடை செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு சுமார் ரூ.1 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளது.
மல்லிகார்ஜுனா முன்பு வெங்காயப் பயிர் வளர்ச்சிக்காக ஆட்களை நியமித்துள்ளார். ஆனால் தற்போது வெங்காயத்தைத் திருடர்களிடம் இருந்து காப்பாற்றப் பாதுகாவலுக்கு ஆட்களை நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.