ராஞ்சி: குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த பிறகே கலந்துரையாடப்படும் என்று தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பிரச்சாரம் செய்து வருகிறார் அமித்ஷா. சர்ச்சைக்குரிய சட்டத்தினால், வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் போராட்டங்களும், காவல் படைகளின் அடக்குமுறைகளும் நடந்து வரும் நிலையில், அதுகுறித்துப் பேசினார் அமித்ஷா.
“மேகாலயா முதல்வரும் அவரின் அமைச்சரவை சகாக்களும், இச்சட்டத்தில் மேற்கொள்வதற்கான திருத்தங்கள் குறித்து என்னை டெல்லியில் சந்தித்துப் பேசினர். அச்சட்டத்தால் தாங்கள் அடையும் பாதிப்புக் குறித்தும் தெரிவித்தனர்.
அப்போது கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து என்னை வந்து சந்திக்குமாறும், அப்போது மாற்றங்கள் செய்வது குறித்து கலந்துரையாடலாம் என்றும் அவர்களிடம் தெரிவித்தேன்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது காங்கிரஸ் கட்சிக்குப் பிடிக்கவில்லை. எனவேதான் அக்கட்சி வன்முறையைத் தூண்டிவிடுகிறது” என்றார்.