டில்லி
அரசு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கத் தேர்வாணையம் உள்ளதைப் போல் நீதிபதிகளுக்கும் தேர்வாணையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.
மாநிலங்களவையில் நீதிபதிகள் தேர்வு குறித்து கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதில் தேர்வு முறை மற்றும் காலி இடங்கள் நிரப்புவது குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். அப்போது அவர் நீதிபதிகள் தேர்வுக்காக அகில இந்திய அளவில் தேர்வாணையம் அமைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
ரவிசங்கர் தனது பதிலில், “தற்போது நீதித்துறையில் காலியாக உள்ள நீதிபதிகள் பணி இடங்களை நிரப்பும் பணியை அரசு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது அரசு அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வாணையம் உள்ளதைப் போல் நீதிபதிகளைத் தேர்வு செய்யத் தேர்வாணையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த தேர்வில் தலித் மற்றும் பழங்குடியினர், ஒதுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். இந்த தேர்வுகளின் மூலம் திறன் படைத்தோருக்குப் பதவி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் நீதிபதிகள், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் நியமனம் செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.