டெல்லி:
அயோத்தி ராமஜென்மபூமி தொடர்பான வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 18 மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உச்சநீதி மன்ற அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
அயோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உச்சநீதி மன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக கடந்த நவம்பர் 9ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் இந்துக்களுக்கே சொந்தம், அங்கு ராமர் கோவில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உள்பட 18 சீராய்வு மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது, தலைமை நீதிபதி பாப்டே தலைமை யிலான அமர்வு இன்று விசாரணை நடத்தியது.
அதைத்தொடர்ந்து, சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டு உள்ளது.