டில்லி

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம்5 ஆம் தேதி  மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.   இதனால் வதந்திகள் பரவி வன்முறை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.    தொலைத்தொடர்பு,  இணைய சேவைகள் முடக்கப்பட்டுப் பல அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், குலாம் நபி ஆசாத் உள்பட பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.   இந்த வழக்கு  விசாரணையின்போது; குலாம் நபி ஆசாத் சார்பில் கபில் சிபல் வாதம் செய்தார்.

அவர் தனது வாதத்தில் ”காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்.   காஷ்மீரில் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.   ஆயினும் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் காஷ்மீரில் உள்ள 70 லட்சம் பேரையும் மத்தி அரசால் சிறையில் அடைக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த வாதத்துக்குப் பிறகு  நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.