ஸ்ரீநகர்
ஸ்ரீநகர் காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகே தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதால் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் லடாக் பகுதி மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்க உள்ளது. பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வந்துள்ளது. இதையொட்டி மாநிலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக மீண்டும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன. கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இரு யூனியன் பிரதேசங்களாக இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் உள்ள ஸ்ரீநகரில் காஷ்மீர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பல் பகுதியில் இந்த பல்கலைக்கழகம் உள்ளது.
இன்று இந்த பல்கலைக்கழகத்தின் வாகன நிறுத்தம் உள்ள பகுதியில் மக்கள் நின்றிருந்த போது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.