மும்பை:
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று செய்தியாளர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வ அறிவித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து கொடுத்து விட்டதாக கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்று மாலை சரியாக 3.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது ராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை, தேசியவாத கட்சியின் சட்டமன்ற தலைவர் அஜித்பவார் ஆதரவை பெற்று, பாஜக ஆட்சி அமைத்தது. கவர்னர் கோஷ்யாரி, மாநில முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிசுக்கும், துணை முதல்வராக, , தேசியவாத காங்கிரசின் அஜித் பவாருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக அதிகாலை 5.30 மணி அளவிலேயே மாநிலத்தில் கவர்னர் ஆட்சி விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த திடீர் நிகழ்வுகள் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கவர்னரின் முடிவை எதிர்த்து, என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கூட்டணி உச்சநீதி மன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், நாளை மாலை 5 மணிக்குள் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
இதற்கிடையில் அஜித்பவாருக்கு ஆதரவு அளித்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும், மீண்டும் சரத்பவாரிடமே சென்றுவிட்ட நிலையில், அஜித்பவார் தனிமரமானார். இதனால், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகசட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மை நிரூபிக்க முடியாத ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து, முதல்வர் பட்னாவிசு உடன்ஆலோசனை நடத்திய, துணைமுதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மாலை 3.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் பட்னாவிஸ்.
அப்போது, சிவசேனா தங்களிடம் முதல்வர் பதவி கேட்டு தொல்லை படுத்தியதாக கூறியவர், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், வெவ்வேறான கருத்துக்களை கொண்டுள்ளன. ஆட்சி அமைக்க எண்ணிக்கை ஒரு பொருட்ல்ல என்று கூறியவர், இந்த கட்சிகள் இணைந்து எப்படி ஆட்சி தர முடியும்.
நாங்கள் சிவசேனாவுக்காக நீண்ட காலம் காத்திருந்தோம், ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை, அதற்கு பதிலாக காங்கிரஸ்-என்.சி.பி.கட்சியினை சந்தித்து வந்தனர். தங்களது கட்சியை விட்டு இதுவரை வெளியே வராத அவர்கள், என்சிபி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்கு சென்று, அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர் என்று சாடினார்.
மக்கள் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று கூறியவர், சிவசேனா சொல்வதுபோல் அவர்களுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்றும், எங்களுடன் சிவசேனா இருக்க வேண்டும் என்று விரும்பினோம், ஆனால் அவர்கள் எங்களுடன் எதையும் பேச முன்வரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பட்னாவிஸ், தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே கவர்னரிடம் சமர்ப்பித்து விட்டதாகவும் கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற அஸ்திரத்தை சந்திக்காமலேயே, பதவி ஏற்ற 3வது நாளிலேயே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிகழ்வு மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.