புதுடில்லி: அனில் அம்பானி நிர்வகித்து வரும், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் சொத்துக்களை வரும் திங்களன்று ஏலம் திறக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை : முகேஷ் அம்பானி நிர்வகித்து வரும், ‘ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்’ நிறுவனம், பாரதி ஏர்டெல் மற்றும் சில நிறுவனங்கள் ஏலம் கேட்கவுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும், இது குறித்து வேறேதும், மேலதிக தகவல்கள் தெரியவில்லை. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே ஏலம் கேட்க உள்ளது தான் பரபரப்பான செய்தியாக உள்ளது.
ஆர்காம் எனும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி, திவால் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து, கடன் கொடுத்த நிறுவனங்கள் திவால் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.
இந்நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் எடுக்க, ‘பார்தி ஏர்டெல் மற்றும் பார்தி இன்பிராடெல்’ ஆகிய நிறுவனங்களும், ‘வார்தே பார்ட்னர்ஸ்’ எனும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமும் கோரியுள்ளன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு, 40 நிறுவனங்கள் கடன் வழங்கி உள்ளன. இதில், ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சீனா டெவலப்மென்ட் பேங்க், இண்டஸ்ட்ரியல் அண்டு கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா’ ஆகியவையும் உள்ளன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் சொத்துக்களைப் பொறுத்தவரை, ஸ்பெக்ட்ரம், கைபேசி கோபுரங்கள், பைபர் ஊடகம் ரியல் எஸ்டேட், ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் இன்ப்ராடெல் ஆகிய உப நிறுவன சொத்துக்கள் என பல சொத்துக்கள் உள்ளன.
கடந்த, 2018ம் ஆண்டில், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுடன் ஒப்பந்தம் செய்ய முன்வந்தது.மேலும், 43 ஆயிரம் தொலை தொடர்பு கோபுரங்கள், 1.78 லட்சம் கிலோமீட்டர் நீள பைபர், ஸ்பெக்ட்ரம் உரிமை ஆகியவற்றை வாங்க நடந்த முயற்சி, கடைசியில் கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால் தோல்வியை தழுவியது.
இப்போது, மீண்டும் முயற்சியில் இறங்கி உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. இதற்கிடையே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை, அனில் அம்பானி ராஜினாமா செய்வதாக வழங்கிய கடிதத்தை, கடன் வழங்கியவர்கள் குழு ஏற்றுக்கொள்ளவில்லை.
பதவியில் இருந்து பிரச்னைகளை தீர்த்து வைத்து தருமாறு அவை கோரியுள்ளன.இந்நிலையில், வரும் 2010 ஜனவரி, 10ம் தேதிக்குள், திவால் நடவடிக்கையை முடித்துவிட வேண்டும் என, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் ஆணையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட, ஐந்து நிறுவனங்கள் ஏலம் எடுக்க முன்வருவதாக வந்த செய்திகளால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்குகள் நேற்று, 6 சதவீதம் அளவுக்கு விலை உயர்வை கண்டன.
தேசிய பங்குச் சந்தையில் ஒரு பங்கின் விலை, 6.67 சதவீதம் அதிகரித்து, 80 பைசாவாக அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில் பங்கின் விலை, 4.55 சதவீதம் அதிகரித்து, ஒரு பங்கின் விலை, 69 பைசாவாக இறுதியில் நிலை பெற்றது.