மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில், நாளை முதல்வர் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்த உறுப்பினர் பாலசாஹிப் தோரட், சட்டமன்ற இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஆனால், அவரை கவர்னர் கோஷ்யாரி சட்டமன்ற இடைக்கால சபாநாயகராக அறிவிப்பாரா என்பது கேள்விக்குறி.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை, திடீர் திருப்பமாக பாரதிய ஜனதா-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தது.
இது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதி மன்றத்தில், மாநில ஆளுநர் பகத் சிங்கிற்கு எதிராகவும்,நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், உச்சநீதி மன்றம், நாளை முதல்வர் பட்னாவிஸ் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டது. மேலும், இன்று மாலைக்குள் சபாநாயகர் யார் என்பதுதேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, பாஜக தரப்பில் சபாநாயகர் பதவிக்கு பொருத்தமான உறுப்பினரை தேடி வருகிறது. அதே வேளையில், காங்கிரஸ் தரப்பின் சபாநாயகராக அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பாலசாஹிப் தோரட் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
மூத்த சட்டமன்ற உறுப்பினராக பாலசாஹிப் தோரட் இதுவரை மாநில சட்டமன்றத்துக்கு 8 முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தோரட்டை சட்டமன்ற இடைக்கால சபாநாயகராக கவர்னர் கோஷ்யாரி அறிவிப்பாரா என்பது சந்தேகமே.