மும்பை:
மகாராஷ்டிராவில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில், சட்டமன்றத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை தற்போதைய பாஜக முதல்வர் பட்னாவிஸ் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி உச்சநீதி மன்றத்தில் சிவசேனா இன்று புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தரில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக கடந்த சனிக்கிழமையன்று (23-11.2019) காலை, யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வகையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் திட்டமிட்டிருந்த நிலையில், பாஜக பதவி ஏற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதி மன்றம் கூறியிருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை பட்னாவிஸ் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிடக்கோரி அறிவித்து உள்ளது.
முன்னதாக நேற்று சிவசேனா உள்ளிட்ட 3 கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள், காலை 10.30 மணியளவில், மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அங்கு, ஆளுநர் மாளிகை அதிகாரிகளை சந்தித்த 3 கட்சிகளின் பிரதிநிதிகள், தங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.