மும்பை:
மகாராஷ்டிராவில், பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி ஏற்றுள்ள நிலையில், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த கவர்னர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.
அங்கு ஆட்சி அமைப்பதில் பா.ஜ-சிவசேனா கூட்டணி இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சி நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த 12ந்தேதி நள்ளிரவு முதல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி மாநில கவர்னர் கோஷ்யாரி பரிந்துரையின் பேரில் அமல்படுத்தப்பட்டது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, பாஜக தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு, ஆட்சி அமைந்துள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.