மும்பை:

காராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சி திடீரென ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, அங்க பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

மாநில முதல்வராக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பட்னாவிசும், துணைமுதல்வராக  தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரும் பதவியேற்று கொண்டார்.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலை பாஜக, சிவசேனா கூட்டணி இணைந்து சந்தித்து, வெற்றி பெற்ற நிலையில், அதிகாரப்பகிர்வு காரணமாக, இரு கட்சிகள் இடையே உறவு முறிந்தது. இதைத்தொடர்ந்து, சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தது. என்சிபி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசிய வந்த நிலையில், கூட்டணி கட்சிகள் இடையே குறைந்தபட்ச செயல்திட்டமும் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவூத் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நள்ளிரவு நடைபெற்ற பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சி இடையே  நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்து, இன்று காலை அவசரம் அவசரமாக பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில்  மாநில முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் பகத் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதுபோல, மாநிலத்தின் துணைமுதல்வராக  தேசியவாத காங்கிரசின் அஜித் பவார்  பதவியேற்று கொண்டார். தற்போது இவர்கள் 2 பேர் மட்டுமே பதவி ஏற்றுள்ளனர்.