அகமதாபாத்: தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் நித்யானந்தா ஈக்குவடார் நாட்டில் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சாமி நித்யானந்தா. பெங்களூரு அருகே பிடதி என்ற இடத்தில் அவரது ஆசிரமம் இருக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள குடியிருப்பில் அவரது பீடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த பீடத்தில், கடத்தப்படும் குழந்தைகள் சித்ரவதைக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன. அதிரடி சோதனையில் குழந்தைகள் மீட்கப்பட நித்யானந்தா சீடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றனர். ஆனால் தற்போது நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
ஆனால் இந்தியாவில் அவர் இல்லை, நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நேபாளத்தில் இருந்து அவர் ஈக்குவடார் நாட்டுக்கு தப்பிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கர்நாடகா சிஐடி போலீசார் கூறி இருப்பதாவது: நித்யானந்தாவின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் காலாவதியாகி விட்டது. பாலியல் வழக்கில் அவர் சிக்கியிருப்பதால் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட வில்லை.
யூ டியூப் சேனல் வழியே அவர் வீடியோ வெளியிட்டு வந்தாலும், அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் உறுதியாக இந்தியாவை விட்டு தப்பித்திருக்க வாய்ப்பே இல்லை.
இந்தியாவில் தான் நித்யானந்தா இருக்கிறார். வான்வழியாகவோ அல்லது கடல்வழியாகவோ அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை என்று கூறியிருக்கின்றனர்.