மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறி இருக்கிறார்.
பாஜக, சிவசேனா அதிக இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றும் முதலமைசசர் பதவி யாருக்கு என்ற கருத்து வேறுபாட்டால் அந்த கூட்டணி உடைந்தது. யாரும் ஆட்சியமைக்க முன்வராததால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து 3 கட்சிகளும் மும்பையில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தின. அதன் முடிவில், எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந் நிலையில் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என்று தேசியவாத காங். தலைவர் சரத்பவார் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: 3 கட்சிகளும் கூடி ஒருமனதாக எடுத்த முடிவு இது.
துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் யார், யாருக்கு இடம், ஆளுநரை எப்போது சந்திப்பது என்பது குறித்து விரைவில் இறுதி செய்யப்படும் என்றார். அதே சமயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில் தாம் தான் முதலமைச்சர் என்ற முடிவு குறித்து கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.