லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒன்றேகால் கோடி விவசாயிகள் மத்திய அரசின் நிதியை பெறமுடியாமல் போகும் நிலை உருவாகி இருக்கிறது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தை 2019ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்குவது நோக்கமாகும்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதை காட்டிலும் இது சிறந்தது என்று பெரும் வரவேற்பு இந்த திட்டத்துக்கு இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து நேரடியாக விவசாயி வங்கிக் கணக்குக்கு இந்த நிதி சென்று சேர்ந்து விடும்.
ஆண்டுக்கு 3 முறை இந்த நிதி விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் இந்த திட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.
இந்த நிதியை பெற விவசாயிகள் அனைவரும் தமது பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்களை அரசிடம் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான காலக்கெடுவும் கொடுக்கப்பட்டது.
அதற்கான கெடு இன்னும் 9 நாட்களில் முடிய இருக்கிறது. விவசாயிகள் விவரங்கள பதியப்படவில்லை என்றால் கிட்டத்தட்ட 13 மில்லியன் விவசாயிகள் நிதியை பெற முடியாத நிலை ஏற்படும்.
இதை உணர்ந்த மாநில நிர்வாகம் மாவட்ட ஆட்சியர்களை முடுக்கி விட்டிருக்கிறது. சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி விவரங்களை பதிவு செய்ய ஆணையிட்டு இருக்கிறது.
இதுகுறித்து தலைமை செயலாளர் ஆர்.கே. திவாரி கூறியிருப்பதாவது: 11.1 மில்லியன் விவசாயிகளின் விவரங்கள், பெயர்கள் ஆதார் விவரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. அவர்கள் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் கிடைக்கும் நிதியை பெற முடியாது என்றார்.
அதே நேரத்தில், 2 மில்லியன் விவசாயிகளின் பெயர்கள் வங்கிக் கணக்கில் உள்ள பெயரில் இருந்து மாறுபட்டு இருப்பதால் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறார்.