மலப்புரம்
கேரளாவின் முதல் பிராமண அரேபிய மொழி ஆசிரியையான கோபாலிகா பனாரஸ் இந்து பல்கலைக்கழக இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியரை நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுரை அளித்துள்ளார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தற்போது சமஸ்கிருத மொழியைப் பயிற்றுவிக்க ஒரு இஸ்லாமியப் பேராசிரியரான ஃபிரோஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஆர் எஸ் எஸ் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. இஸ்லாமியராக இருந்தாலும் ஃபிரோஸ் கான் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்று பிஎச்டி பட்டமும் பெற்றவர் ஆவார்.
இதைப் போல் கேரள மாநிலத்தில் பிராமண வகுப்பைச் சேர்ந்த முதல் அரேபிய ஆசிரியையான கோபாலிகாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை நாம் நேற்று பதிந்திருந்தோம். (https://www.patrikai.com/keralas-first-brahmin-arabian-teacher-is-about-to-retire-on-march/ ) அவர் தொடர்ந்து அரேபிய மொழி ஆசிரியையாகப் பணி புரிய அவர் கேரள உயர்நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றுப் பணியை தொடர்ந்துள்ளார்.
கோபாலிகா, “பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஃபிரோஸ் கானுக்கு கிடைத்தது போல என் மீதும் ஒரு காலத்தில் வெறுப்பு இருந்தது. ஒருவர் எந்த மொழியைக் கற்க வேண்டும் மற்றும் கற்பிக்க வேண்டும் என்பது அவரவர் சொந்த விருப்பமாகும். நான் செய்ததைப் போல் அவரும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். அங்கு அவருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.