புதுடெல்லி: நாட்டின் உயர்மட்ட புலனாய்வுப் பிரிவான சிபிஐ அமைப்பில், சுமார் 1000 பணியிடங்களுக்கும் மேல் காலியாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சரின் எழுத்துப்பூர்வ அறிவிப்பில் இடம்பெற்றுள்ள விபரங்களாவது; சிபிஐ அமைப்பில் மொத்தம் 5532 பணியிடங்கள் உள்ளன. ஆனால், தற்போதைய நிலையில், அங்கு பணியாற்றுவோரின் எண்ணிக்‍கை 4503 மட்டுமே.

எனவே, 1000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழல் உள்ளது. இந்தப் பணியிடங்களில் பெரும்பாலானவை எக்ஸிகியூடிவ் தர நிலையிலான பணியிடங்களாகும்.

இவற்றை நிரப்புவது அவசியம். எனவே, காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சிபிஐ அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பான சிபிஐ அமைப்பிற்கு அதிக நிதியாதாரங்கள் மற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அமைப்பு மேற்கொண்டுவரும் வழக்கு விசாரணைகளில் மத்திய அரசின் தலையீடுகள் எதுவும் கிடையாது” என்றார் அமைச்சர்.