டெல்லி: காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி படை பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோ பாதுகாப்பு அண்மையில் மத்திய அரசு திரும்ப பெற்றது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
அந்த தருணத்தில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக எமது குடும்பத்தை பாதுகாத்த எஸ்பிஜி படையினருக்கு சோனியா காந்த நன்றி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், காந்தி குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
நாடாளுமன்ற வளாகத்துக்கு அடுத்துள்ள சாஸ்திரி பவன் முன்பு குவிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கண்டித்து, அவர்கள் முழக்கமிட்டனர். காவல்துறை தடுப்புகளை தாண்டி அவர்கள் குதிக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்புக்காக குவிந்திருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.