டில்லி
கணக்கில் காட்டாத வருமானத்தில் அதிக பட்ச தொகை ரூ.2000 நோட்டுக்களாக பதுக்கி வைத்துள்ளதாக அரசு தகவல் தெரிவிக்கிறது.
கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். அதனால் அதிக மதிப்பிலான நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவை ஆகின. இதன் மூலம் கறுப்புப்பணம் முழுவதுமாக ஒழியும் என சொல்லி வந்த போதிலும் 99% அதிகமான நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளன.
பழைய நோட்டுக்களுக்குப் பதிலாக ரூ.2000 நோட்டுக்களும், ரூ. 500 நோட்டுக்களும் புழக்கத்தில் விடப்பட்டன. இந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் தேதி கணக்குப்படி ரூ.2000 நோட்டுக்கள் 3,291 மில்லியன் அதாவது ரூ.6,582 பில்லியன் மதிப்பில் புழக்கத்தில் விடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ரூ.2000 நோட்டுக்கள் மிகக் குறைந்த அளவில் புழக்கத்தில் உள்ளன.
இதனால் ரூ.2000 நோட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்படும் என வதந்திகள் பரவியதால் ரூ.2000 நோட்டுக்கள் அடியோடு புழக்கத்தில் இல்லை எனவே கூறலாம். இவ்வாறு புழக்கத்தில் இல்லாத ரூ.2000 நோட்டுக்களை செல்லாதது என அறிவிக்கலாம் என முன்னாள் நிதிச் செயலர் கர்க் தெரிவித்துள்ளார்.
நேற்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த தகவலின்படி கணக்கில் வராமல் பிடிபட்ட தொகைகளில் அதிக பட்சமாக ரூ.2000 நோட்டுக்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த தகவலின்படி பிடிபட்ட தொகையில் கடந்த 2017-18 ஆம் வருடம் 67.91% உம் 2018-19 அம் வருடம் 65.93% உம், 2019-20 (இதுவரை) 43.21% உம் ரூ.2000 நோட்டுக்களாக இருந்துள்ளன.
அரசின் இந்த தகவலில் பிடிபட்ட ரூ.2000 நோட்டுக்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு குறித்துக் கூறப்படவில்லை. இந்த அரசு தகவலின் மூலம் கணக்கில் வராத வருமானம் பெரும்பாலும் ரூ.2000 நோட்டுக்கள் ஆக பதுக்கப்பட்டிருந்து தெளிவாகி உள்ளது.