சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வாகன காப்பகத்தில் அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 70 நாட்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
கார்த்திகை மாதம் 1ம் தேதியான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படுவது வழக்கம். சபரிமலையிலும் சேவா சங்கத்தினர் சார்பில் மகரவிளக்கு காலம் முடியும் வரை அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தேவசம்போர்டு உத்தரவுகள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக அவை அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான எல்லீஸ்நகர் வாகன காப்பகத்தில் அடுத்து வரும் 70 நாட்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைக்க, அகிலபாரத ஐயப்ப சேவா சங்க மாநில தலைவர் விஸ்வநாதன், மாவட்ட தலைவர் பாண்டியராஜன் ஆகியோர் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.