விருதுநகர்
வசதி அற்றவர்களும் வயதானவர்களும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடந்தது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துக் கொண்டார். அவர் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது உரையில் ”வசதி இல்லாதவர்களுக்கும் வயதானவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க முடியாது. இது கம்பியூட்டர் காலம். எனவே இளைஞர்களைத் தேர்வு செய்து வாய்ப்பு அளிக்க உள்ளோம். திமுக அழிந்து வருவதால் அக்கட்சியில் தேர்தல் வாய்ப்பு கேட்க ஆட்கள் இல்லை.
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் வேலூர் மக்களவை தேர்தலில் நாங்கள் திமுகவின் சங்கை நசுக்கி பிடித்தோம். திமுக வேட்பாளர் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். நாங்கள் இன்னும் சங்கை இறுக்கிப் பிடித்திருந்தர். அதிமுக வெற்றி பெற்று இருக்கும்.
வேலூர் மக்களவை தேர்தலில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்களிடம் மதப் பிரச்சினையைத் தூண்டி விட்டதால் திமுக வென்றது. ஆனால் தற்போது இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் அதிமுக பக்கம் வந்து விட்டனர். இனி அவர்கள் அதிமுகவுக்குத் தான் வாக்களிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.