சென்னை: தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரன் குராலா நியமிக்கப்பட்டு உள்ளார். தென்காசிக்கு அருண் சுந்தர் தயாளன், செங்கல்பட்டுக்கு ஜான் லூயிஸ், திருப்பத்தூருக்கு சிவனருள், ராணிபேட்டைக்கு திவ்யதர்ஷினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர், அதற்கு சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளே தற்போது ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகள் போன்று, ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுனா சிங் தென்காசிக்கும், மதுரை பட்டாலியன் கமாண்டண்ட் ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சிக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் செங்கல்பட்டுக்கும், திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன் ராணி பேட்டை மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.