டில்லி

ர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியின் குறுக்கே அணை கட்ட தடை விதிக்க கோரிய தமிழக அரசு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் யார்கோல் என்னும் கிராமத்தின் வழியாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தென்பெண்ணையின் கிளை நதியான மார்கண்டேய நதி பாய்ந்து வருகிறது.  யார்கோல் பகுதியில் 50 மீட்டர் உயரத்தில் கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. இது குறித்து கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் குடிநீர்த் தேவைக்காக அணை கட்டுவதாகத் தெரிவித்து அனுமதி பெற்றுள்ளனர். அதற்குப் பிறகு அந்த அணையின் உயரத்தை அதிகரித்து மொத்தமாக அங்குள்ள தண்ணீரை கோலார் மற்றும் பெங்களூர் நகரப் பகுதிகளுக்கு மாற்றி விடுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தி வந்தனர்.

தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே  நீர் பங்கீடு தொடர்பான ஒரு பிரதான மனுவானது நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கோடு சேர்ந்து இந்த இடைக்கால மனுவைத் தமிழக அரசு தாக்கல் செய்தது.  இந்த மனுவை நீதிபதிகள்  யு.யு.லலித் மற்றும் வினித் சரண் அமர்வு விசாரித்து வந்தது. கர்நாடக அரசு பதில் மனுத் தாக்கல் செய்து அதற்குத் தமிழக அரசும் விளக்கம் அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து கர்நாடக அரசின் வாதமாக ”இந்த நதிநீரை உரிமை கோருவதற்குத் தமிழகத்திற்கு அதிகாரம்  கிடையாது.  இது முழுக்க முழுக்க கர்நாடக மாநிலத்தில் பாய்கிறது. அத்துடன் இந்த மார்க்கண்டேய நதி, தென்பெண்ணை ஆற்றின் கிளையில் இருப்பது. இங்கு அணை கட்டுவதற்குத் தமிழக அரசின் அனுமதியை நாங்கள் பெற வேண்டியதில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பதிலை எதிர்த்து தமிழக அரசு, தமிழகத்திலும் தென்பெண்ணை ஆறு பாயும் நிலையில், தங்களிடம் உரிய அனுமதி பெறாமல் கர்நாடக அரசு அணை கட்டி வருவதால் கடந்த 1892ம் ஆண்டு நதிநீர் ஒப்பந்தத்தைக் கர்நாடக அரசு மீறிச் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டியது. அத்துடன் குடிநீருக்காக அணை கட்டுவதாகக் கூறி நதியின் நீர்ப்போக்கை கர்நாடகம் மாற்றியுள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

தமிழக அரசின்  இந்த எதிர்ப்பு மனு வழக்கை விசாரித்து அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று தமிழக அரசின் மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்,  கர்நாடக அரசு அணை கட்ட தடையில்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது.