சென்னை:

மிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள், தெருக்களை உடனே சீரமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு கேப்டன் கம்பிரமாக வருவார் என்றும் கூறினார்.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரமேலதா, சுதிர் உள்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அவர்களுடன்  கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,  உள்ளாட்சித் தேர்தல், சாலைகள் சீரமைப்பு, டெங்கு தடுப்புப் பணிகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தேமுதிக அறிவித்துள்ளது.

மேலும், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் எனவும் தேமுதிக வலியுறுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய,  உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக.வுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் வெற்றி பெறுவதற்கு கட்சித் தொண்டர்கள் பணியாற்ற வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தமிழகத்தில் மழை காரணமாக சேதமடைந்துள்ள சாலைகள் உடனே சீரமைக்கப்பபட  வேண்டும், அதற்கான நிதியை தமிழகஅரசு ஒதுக்கி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும்,  திருவள்ளுவர் விவகாரத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி சர்ச்சை நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  தேமுதிகவின் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் கேட்டு பெறுவோம், முதல்வரும் கட்டாயம் தருவோம் என உறுதி அளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிட, அதிமுகவிடம் இருந்து பெற வேண்டிய இடங்கள் குறித்து பேச ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.

யார்  கட்சி ஆரம்பித்தாலும் ஆட்சியில் அமரவேண்டும் என்ற எண்ணத்தில் தான். அந்த எண்ணம் எங்களுக்கும் உள்ளது. நாங்களும் ஆட்சியில் அமருவோம் அதற்கான நேரம் வரும். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு கேப்டன் விஜயகாந்த் கம்பீரமாக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.