மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணையித்து, தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான பணி நேரத்தை 8 மணி நேரமாக தமிழக அரசு நிர்ணையித்துள்ளது. கூடுதலாக 1 மணி நேரம் பணி செய்தால், நிர்ணையிக்கப்பட்ட ஊதியத்தை விட இரு மடங்கு அதிகமாக பெறலாம் என்றும், 1976ம் ஆண்டு இது தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், மருந்தகங்கள், நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் பிரதிநிதிகளுக்கு ஆகியோருக்கு இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை செயலாளர் முகமத் நசிமுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விற்பனை பிரதிநிகளுக்கான வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. நாளின் தொடக்கத்தில் முதல் 1 மணி நேரம், எழுத்தர் மற்றும் ஆயத்த பணிகளுக்காக ஒதுக்கப்பட்டும். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளையாக கடைபிடிக்கப்படும். ஒரு வாரத்திற்கு 54 மணி நேரத்திற்கு மேல் யாரும் பணி செய்ய கூடாது. அதேநேரம் நிர்ணையிக்கப்பட்ட ஊதியத்தை விட இரட்டிப்பாக பெற விரும்பினால், கூடுதல் நேரம் எடுத்து பணி செய்ய அனுமதி உண்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக விற்பனை பிரதிநிதிகளுக்கான நேரம் தமிழகத்தில் நிர்ணையிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக துறை ஆணையர் அறிக்கை அனுப்பி, அது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் தேசிய தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தர், “மருத்துவ பிரதிநிதிகள் மட்டும் தமிழகத்தில் பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் பேர் வரை இருக்கிறார்கள். இவர்களை தாண்டி 11 துறைகளிலும் உள்ள விற்பனை பிரிதிநிதிகளும் இதில் அடங்குவார்கள் எனில், அவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும். நாங்கள் எதிர்பார்ப்பது வேலை நேரத்தை மட்டுமல்ல, வேலை தொடர்பான சட்ட விதிகளையும் தான். துறை ரீதியிலான வேலை நேரம் உட்பட அனைத்தையும் நிர்ணையிக்கும் தனிச்சட்டம் தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.