அமராவதி:
ஆந்திர தலைமை செயலாளர் பதவியில் இருந்த எல்.வி.சுப்பிரமணியம் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். பல நடவடிக்கைகள் அவருக்கு புகழை தேடித்தந்த நிலையில், அப்துல்கலாம் பெயரிலான விருதை நீக்கி விட்டு, அதே விருதை, தனது தந்தையான ராஜசேகர ரெட்டி பெயரில் அறிவித்தது நாடு முழுவதும் ஜெகன்மோகன் ரெட்டி மீதான நன்மதிப்பை குறைத்தது.
இந்த நிலையில், தற்போது தலைமைச்செயலாளரை திடீரென நீக்கியிருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்தான், தனது கட்சி எம்எல்ஏமீது புகார் கூறிய பெண்அதிகாரியிடம், கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று கூறிய நிலையயில், இன்று திடீரென தலைமை செயலாளரை அதிரடியாக நீக்கி உள்ளார். அவருக்கு பதிலாக நில நிர்வாக தலைமை கமிஷனர் நீரப்குமாரி பிரசாத் கூடுதலாக தலைமைச் செயலாளர் பொறுப்பை கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.
தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட எல்.வி.சுப்பிரமணியத்துக்கு மனிதவள வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. 1983-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எல்.வி.சுப்பிரமணியம், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, ஆந்திர தலைமை செயலாளராக தேர்தல் கமிஷன் நியமித்தது.
தேர்தலில் வெற்றிபெற்று ஜெகன்மோகன்ரெட்டி பதவி ஏற்றதும் எல்.வி.சுப்பிரமணியமே தலைமைச் செயலாளராக நீடித்து வந்தார். தற்போது, அவர் மாற்றப்பட்டு முக்கியத்துவம் இல்லாத்துறைக்கு மாற்றப்பட்டு இருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.